நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மானிக்கவேலூரை சேர்ந்தவர் சுரேஷ். லாரி ஓட்டுனரான இவர் கஸ்தூரிபட்டியை சேர்ந்த கௌரி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் புகழ்வின் என்ற ஆண் குழந்தை இருந்தான். சுரேஷும் கௌரியும் சமீப காலமாக வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளனர். நேற்று மாலை சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனக்கு சொந்தமான தோட்டத்திற்க்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததை அடுத்து அவர்களை உறவினர்கள் தேடிச்சென்றனர். அப்போது மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப்பார்த்து அதிர்ந்து போயினர். சுரேஷ் மட்டும் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்க கௌரியும் புகழ்வினும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்தனர். சுரேஷை மீட்ட பொது மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இடத்திலிருந்து கத்தி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். கொடூர கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உறவினர் மற்றும் ஊராரிடத்தில் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலில் அந்த கொலைக்கான காரணமானவர் சுரேஷ் பக்கம் திரும்பியுள்ளது. சுரேஷின் நண்பரான வீரக்குமாரும் கௌரியும் பேசி பழகியதாக கூறப்படுகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டில் இல்லாதபோது கௌரியை சந்திக்க வீரக்குமார் சென்றுள்ளார். இதனால் நடத்தை மீது சந்தேகமடைந்த சுரேஷ் மனைவியையும் குழந்தையையும் தோட்டத்திற்க்கு அழைத்து சென்று கொலை செய்து இருக்கலாம் எனபோலிசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு தானும் தனது கழுத்தை அறுத்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுரேஷ் குணமடைந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருக்கிறார்கள்.