சோமனூர் பகுதியில் புது மாப்பிள்ளை சாவில் மர்மம் ? எஸ் பி நேரில் விசாரணை.

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்டம் சோமனூரை அடுத்துள்ள ஆனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் பாபு.கட்டிட தொழிலாளி இவரது மகன் பரமசிவம்(24). தாய் விஜயா.இன்று காலை வீட்டின் முன்பு பரமசிவம் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். விசைத்தறி கூலி வேலை செய்யும் பரமசிவம் நேற்று இரவு தன்னுடைய மாமன் மகன் திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.

 

திருமண நிகழ்ச்சி என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.இன்று அதிகாலை வீட்டின் முன்பாக மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் சாலையில் இறந்து கிடந்தார்.இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்து, காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார், அப்போது,கோவை மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் பரமசிவம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாலை விபத்தில் அடிபட்டு உயிரிழந்தாரா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

பரமசிவம் நேற்று இரவு தன்னுடைய மாமன் மகன் திருமணம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நண்பர்களுடன் வீடு திரும்பினார் என்பதும், காலையில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது பரமசிவத்திற்கு ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற புதன் கிழமை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று உறவினர்களுடன் உப்பு ஜவுளி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

 

புது மாப்பிள்ளையான பரமசிவம் வீட்டின் அருகிலேயே சாலையில் ரத்த வெள்ளத்தில் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தது விபத்தா அல்லது கொலையா என்ற விசாரணையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமசிவம் கொலை செய்யப்பட்டாரா என்பதை ஆய்வு செய்ய கோவையில் இருந்து மோப்ப நாய் ஹாரி வரவழைக்கப்பட்டது, பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று சென்று பார்த்தது மற்றும் தடவியல் நிபுணர்கள் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை ஆய்வு செய்தனர்.

பரமசிவத்திற்கு உடன் பிறந்தவர்கள் முத்துலட்சுமி, நித்தியா, இந்திராணி உட்பட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். சோமனூர் அடுத்த ஆனந்தபுரம் பகுதியில் விசைத்தறி கூலித்தொழிலாளியான புதுமாப்பிள்ளை பரமசிவம் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply