கோவையில், நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை தனியார் கல்லூரி வளாகத்தில் வைத்து, கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே குளத்துபாளையம் பகுதியில் வசிப்பவர் கனகராஜ். இவருக்கு நந்தினி என்ற மனைவியும்,இரண்டு காவ்யா,அஸ்வின் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.நந்தினியை 12 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், போதைப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு ஆளானவர் என்பதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒருவருடமாக கணவனை பிரிந்து குளத்துபாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும்,கோவைபுதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வேலைபார்த்து வந்துள்ளார்.மேலும்,டிக்-டாக்கில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டும் வந்துள்ளார்.இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கனகராஜ் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள அடிக்கடி முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது மனைவியிடம் தகராறு செய்து மகன் அஸ்வினை மட்டும் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.தொடர்ந்து கனகராஜ் நந்தினிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது நீண்ட நேரம் அழைப்பு பிசியாக இருந்ததால் கனகராஜ் நேற்று மதியம் நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு சென்று, அங்கு நீண்ட நேரம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இருவருக்கும் தகராறு முற்றியதாக தெரிகிறது.
அப்போது, ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் தலை மற்றும் உடலில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயடைந்த நந்தினியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,நந்தினி மருத்துவமனை செல்லும் வழியிலியே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீசார் கணவன் கனகராஜை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பேசி பிஸியாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் தனது காதல் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.