பஞ்சாப் அணியை ஊதித்தள்ளியது ஐதராபாத்! வார்னரின் வாண வேடிக்கையால் அசத்தல் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, 45 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வென்றது. வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த 48ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்து வீசியது.

 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தார். இந்த ஆட்டத்துடன் நாடு திரும்பும் டேவிட் வார்னர், பந்தை நாலாபுறமும் விரட்டி ரன்களை குவித்தார்.

 

மறுபுறம், விருத்திமான் சஹா, 28 ரன்கள், மனிஷ் பாண்டே 36 ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

நடப்பு தொடரில், 12 போட்டிகளில் ஆடி ஒரு சதம், 8 அரை சதம் உள்பட 692 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை, அவர் தக்க வைத்து கொண்டார். இறுதியில், 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

 

பின்னர், 213 ரன் என்ற பிரம்மாண்ட இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. கிரிஸ் கெயில் 4(3) ரன்களில் வெளியேற, மயங்க் அகர்வால் 27(18) ரன்களில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 21(10), டேவிட் மில்லர் 11(11) ரன்களும், கேப்டன் அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கே. எல். ராகுல் 79(56) ரன்களில் வெளியேறினார்.

 

பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து, 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

ஐதராபாத் அணிக்கு இது, 6ஆவது வெற்றி; பஞ்சாப் அணி சந்தித்த 7ஆவது தோல்வி என்பதால், அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.

 

ஏற்கனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


One thought on “பஞ்சாப் அணியை ஊதித்தள்ளியது ஐதராபாத்! வார்னரின் வாண வேடிக்கையால் அசத்தல் வெற்றி!

Leave a Reply