இந்து தந்தையின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் முதல்முறையாக வழங்கிய ஐக்கிய அமீரகம்!

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், முதல்முறையாக இந்து தந்தைக்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

எண்ணெய் வளம் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பணிக்கு செல்கின்றனர். இந்தியாவில், குறிப்பாக கேரளாவில் இருந்து செல்பவர்கள் அதிகம்.

 

அங்குள்ள திருமண சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் ஆண், பிற மதத்தை சேர்ந்த பெண்ணை மணந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முஸ்லிம் பெண் பிற மதத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்ய அனுமதி கிடையாது.

 

கேரளாவை சேர்ந்த இந்துவான கிரண் பாபு, அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிமை, திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2016 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர்.

 

அந்த தம்பதிக்கு, கடந்தாண்டு ஜூலையில், பெண் குழந்தை பிறந்தது. முஸ்லிம் தாய்க்கு குழந்தை பிறந்தாலும், அதன் தந்தை இந்து என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

 

நடப்பு 2019ஆம் ஆண்டை, சகிப்புத்தன்மை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் கடைபிடித்து வருகிறது. இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, கிரண் பாபு தனது ஒன்பது மாத குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மீண்டும் விண்ணப்பித்தார்.

 

அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு, தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.


Leave a Reply