சமாதானமா? சவாலா? முடிவு உங்க கையில…! சீமானுக்கு பிரபல நடிகர் பகிரங்க எச்சரிக்கை

தமக்கும் தமது ரசிகர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினர் தொல்லை தருவதை சீமான் தடுக்காவிட்டால், சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். தமது தாய்க்கும் கோவில் எழுப்பி பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர்.

 

இதற்கிடையே, ராகவா லாரன்ஸ் குறித்து சீமான் தெரிவித்த சில கருத்துகளுக்கு பிறகு இருவரிடையே வார்த்தை போர் வலுத்துள்ளது. ராகவா லாரன்ஸ் செல்லுமிடங்களில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சிலர் சென்று இடையூறு செய்ததாகவும், ராகவா லாரன்ஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், முகநூலில் நீண்ட பதிவொன்று போட்டுள்ள ராகவா லாரன்ஸ், அதில் சீமானுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார். தம்மை அவதூறு பேசினால் தாங்கிக் கொள்ளலாம்; மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தமது சேவையை நாம் தமிழர் கட்சியினர் சமூகவலை தளங்களில் பழிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

 

நடனம், டைரக்‌ஷனில்  ஜீரோவாக இருந்த தாம், பின்பு அதை கற்றுக்கொண்டு ஹீரோ ஆனதாகவும், தம்மை என்னை அரசியலில் இழுத்து ஹீரோ ஆக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

நீங்கள் பேச்சை தான் அதிகம் பேசுவீர்கள்;  நான் சேவையை செயல்பாட்டில் அதிகமாக செய்வேன்.  நான் என்னென்ன நன்மைகள் செய்தேன் என பட்டியலிட்டால் உங்களால் பதில் சொல்ல முடியாது.  இதுபற்றி இருவரும் பொது விவாத மேடையில் அமர்ந்து விவாதம் நடத்தலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இனியேனும் தம்மை பழிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்; சமாதானமாக சென்றால் சமாதானத்திற்கு தயார்; இல்லையென்றால் சவாலுக்கு தாமும் தயார் என்று சீமானை ராகவா லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

 

தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் மீது ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ள புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply