வெற்றிகரமாக வானில் உலா வந்த உலகின் மிகப்பெரிய விமானம்

Publish by: --- Photo :


வானில் பறந்துகொண்டிருக்கும்போதே அதில் இருந்து விண்கலங்களை ஏவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விமானம், அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் ‘ஸ்ட்ராடோலான்ச்’ என்ற நிறுவனம், வானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதில் இருந்து விண்கலங்களை ஏவும் வகையில் பிரமாண்டமான விமானத்தை தயாரித்தது.  இந்த விமானத்தை சுமார் 10 கி.மீ. உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பின் விண்கலத்தை ஏவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

சோதனை ஓட்டமாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மோஜவே விமான தளத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டு, 274 கி.மீ. வேகத்தில் சுமார் 17,000 அடி உயரத்துக்கு பறந்தது. 2½ மணி நேர பயணத்துக்கு பிறகு விமானம் மீண்டும் மோஜவே விமான தளத்துக்கு பாதுகாப்பாக திரும்பியது.

 

இருவேறு விமானங்களை ஒன்றாக இணைத்தது போல இருக்கும் இந்த விமானத்தில்  6 என்ஜின்கள் உள்ளன. இறக்கைகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த விமானம் தான் உலகிலேயே மிகப்பெரிய விமானம் ஆகும். இந்த விமானத்தின் 2 இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடி உள்ளது என்று, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.