தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் இன்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் தரிசித்து வழிபட்டனர்.
அதிகாலையிலேயே வீட்டின் முன் மாக்கோலமிட்டு, வீடுகளில் முக்கனிகள்,பணம் மற்றும் ஆபரணங்களை வைத்து சுவாமியை வணங்கி, படையலிட்டனர். அதை தொடர்ந்து கோவில்களுக்கு சென்று அங்கு நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வனபத்ர காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இக்கோவிலில் அதிகாலை முதற்கொண்டே பக்தர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.
கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருளாசி பெற்றுச்சென்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருப்பூரில் உள்ள விஸ்வேஸ்வரர் கோவில், பெருமாள் கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், திருமுருகன்பூண்டி ஆலயம், அவிநாசியில் உள்ள புகழ்பெற்ற அவிநாசியப்பர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
-கோவை விஜயகுமார்