சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் அரசுக்கு சறுக்கல்! அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிப்பதற்கு தடையில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையையும் ரத்து செய்தது.

 

தமிழகத்தில் உள்ள கோவில்களில் காணாமல் போன சிலைகள் குறித்தும் அது கடத்தப்பட்டதா எனவும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரித்து வருகிறார். இவர், கடந்த நவம்பர் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அவரை மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் அசோக்பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும்  கேட்ட நீதிபதிகள், இன்று தீர்ப்பு அளித்தனர்.

 

அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் பணியை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

எனினும், பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்று விட்டதால்  சிலை கடத்தல் வழக்கின் குற்றவாளிகளை அவர் கைது செய்ய அதிகாரமில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.


Leave a Reply