வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், வனவிலங்குகள் தண்ணீரைத்தேடி ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, மான் உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன .
கடந்த ஆண்டைக்காட்டிலும் இம்முறை கோவை மாவட்டத்தில் மழைப்பொழிவு 50 சதவிகிதம் குறைவு. இதனால் வனப்பகுதிக்குள் கடும் வறட்சி நிலவி வருகிறது . வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி வனப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்து வருகின்றன். மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் விலங்குகள் நுழைவதால் மனித – வன உயிரின மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை கருதி, கோவை வனத்துறையினர் மின்சார வசதியுடைய வனப்பகுதிகளில் மின் மோட்டார், சோலார் பவர் மோட்டார் மூலம் , டேங்கர் லாரிகளில் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வருகின்றனர் .
வனத்துறையினர் எச்சரிக்கை
இதுகுறித்து காரமடை வனச்சரகர் சரவணன் ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு அளித்த பேட்டியில் வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால் விலங்குகள் வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரும் ஆபத்து உள்ளது.
இதை தடுக்க, டேங்கர் லாரிகள் மூலமாக வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வருகிறோம். வனவிலங்குகளுக்கு கோடை கால நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க, வனப்பகுதிகளில் ஆங்காங்கு உப்புக்கட்டிகள் வைத்து அவற்றை பாதுகாத்து வருகிறோம் என்றார்.
வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகளை துன்புறுத்தவோ , வேட்டையாடவோ கூடாது ; வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லவோ , தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது. மீறினால் வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-விஜயகுமார், கோவை.