சின்னசேலத்தில், சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து, காவல்துறையில் ஒப்படைத்த இளைஞரின் நேர்மையை காவல்துறையினரும், அப்பகுதியினரும் வெகுவாக பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர் பிரவின் குமார். இவர், அப்பகுதியில் ஆயுர்வேத மருந்துக்கடை உள்ளிட்ட சில வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றுவிட்டு அவர் திரும்பும் போது, சாலையில் ஒரு பை இருந்ததை கண்டார். அதனுள் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீன் குமார், பணத்தை தொலைத்தவர்கள் யாரேனும் தேடி வருகின்றனரா என்று, அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் யாரும் அவ்வாறு வரவில்லை. இதையடுத்து, சின்னசேலம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், நடந்ததை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து, அந்த தொகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கீழே கிடைப்பதை எடுத்துக் கொண்டு சத்தமின்றி பலரும் நழுவிவிடும் இக்காலத்தில், இளைஞர் பிரவின் குமாரின் நேர்மையான செயலை காவல்துறையினரும், அக்கம்பக்கத்தினரும் வெகுவாக பாராட்டினார்கள்.