46 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, 27 விருதுகளை வென்றிருக்கிறது இப்படம்.
ஆண்களால் மட்டுமே முடியும் என்று சொல்லப்பட்ட பல வேலைகளில் பெண்களும் பணியமர்த்தப்படும் காலம் வந்துவிட்டது. ஆனால், ஆண்களுக்குச் சமமாகவும் கண்ணியமாகவும் பெண்கள் நடத்தப்படும் நாள் வந்துவிட்டதா? நிச்சயமாக இல்லை என்பதை உண்மைக்கு மிக அருகில் சென்று நமக்கு உணர்த்துகிறது ‘காவல் தெய்வம்’ என்னும் குறும்படம்.
பதவியிலிருக்கும் அமைச்சர்கள் கடந்துசெல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள அரை கிலோ மீட்டருக்கு ஒரு காவலர் எல்லை தெய்வத்தைப் போல நின்று கண்காணிக்க வேண்டும். பெண் காவலர் போதும்பொண்ணுக்கு அன்று தரப்பட்ட பணியும் அதுதான்.
ஆளில்லா நெடுஞ்சாலையில், கொளுத்தும் வெயிலில் நின்றபடி அமைச்சரின் வாகனத்தை எதிர்பார்த்துத் தன்னந்தனியே நின்றுகொண்டிருக்கிறார் ‘போதும்பொண்ணு’ (பெயர்க் காரணத்தைக் குறும்படத்தைக் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்).
ஒதுங்க இடமில்லை
நிறைமாதக் கர்ப்பிணியான அக்காவின் பிரசவம் குறித்த பதைபதைப்போடு அலைபேசியில் அழைத்துப் பேசுகிறார் போதும் பொண்ணுவுடைய அம்மா. அந்த நேரத்தில் அங்கே வரும் உயர் அதிகாரியான கண்காணிப்பு ஆய்வாளர், போதும்பொண்ணு வேலை செய்யாமல் போனில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பதாக நினைத்து ஏளனமான பார்வையோடு எச்சரித்துவிட்டுச் செல்கிறார்.
அமைச்சர் இப்ப வருவாரோ எப்ப வருவாரோ என்ற நிலையில் எடுத்து வந்த சாப்பாட்டை அரக்கப்பரக்கச் சாப்பிட்டு, வேர்த்துச் சோர்ந்து, பாட்டில் தண்ணீர் முழுவதையும் குடித்து, இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்க இடமில்லாமல் கடைசியில் வேறுவழியின்றி அருகில் இருக்கும் புதருக்குள் செல்ல எத்தனிக்கிறார்.
அந்தக் கணத்தில் சிக்கல் மூள்கிறது. தன்மானத்தின் மீது கீறல் விழுந்த நிலையில், தரக் குறைவாகப் பேசும் உயர் அதிகாரியைக் கோபத்தில் அறைந்துவிடுகிறார். அதற்காக வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மன்னிப்பு கேட்கும்படியும் மிரட்டப்படுகிறார். தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாமல் வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுக்கிறார்.
அவரால் அது முடிந்ததா என்பதை யதார்த்தமாக, ஒரு கூடுதல் ஷாட்கூட இல்லாமல் சித்தரிக்கிறது ‘காவல் தெய்வம்’. ஆண் போலீஸ் அதிகாரிகளால் மட்டுமல்ல பெண் உயர் அதிகாரிகளாலும் கீழ்மட்டத்தில் இருக்கும் பெண் காவலர்கள் தரக்குறைவாகவும் துச்சமாகவும்தான் நடத்தப் படுகிறார்கள் என்பதை புஷ்பநாதன் ஆறுமுகத்தின் இயக்கம் ஒரு சாட்சியம்போல் சுட்டிக் காட்டுகிறது.
46 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, 27 விருதுகளை வென்றிருக்கிறது இப்படம். அவற்றில் 8 விருதுகளைச் சிறந்த நடிப்புக்காக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சரண்யா ரவி பெற்றிருக்கிறார்.