லக்னோ ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்துக்கு அருகில் பை ஒன்றில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியின் அருகில் டிராவல் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதைப் பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீஸார், அந்த பையைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு பெண்ணின் ஒரு பகுதி உடல் பாகங்கள் இருந்தது தெரிய வந்தது. பெண்ணின் தலை, கை மற்றும் கால் பகுதிகள் மட்டும் பாலிதீன் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. மற்ற பாகங்கள் அதில் இல்லை. இதைக் கண்ட போலீஸார் உடனடியாக மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனை மேற்கொண்டனர் ஆய்வுக்குப் பின் பேசிய எஸ்.சி. ராவத் (எஸ்.பி), “முதற்கட்ட விசாரணையின் முடிவில் இறந்தவர் 40 வயதான தொழிலாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த பையில் பெண்ணின் உடல் பாகங்கள் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது. அதனால், சரியான அடையாளத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அருகிலுள்ள பகுதிகளில் சி.சி.டிவி காட்சிகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்
பின்னர் நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அந்தப் பகுதியில் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சிவப்பு கலர் மையில் எழுதப்பட்டிருந்தது. இதை யார் எழுதினார்கள் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சிசிடிவி ஆய்வில் நடுத்தர வயதுள்ள நபர் பேக்கை சுமந்து வருவது பதிவாகியுள்ளது. அவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சமீபத்தில் சென்னையில் சந்தியா என்பவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டு அவரது உடல்பாகங்கள் குப்பையில் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லக்னோவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் மற்ற உடல் பகுதிகளைக் கண்டுபிடிக்கும் வகையில் விசாரணையைப் போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்