மூன்றாவது அலை வந்துவிடுமோ..?
தமிழ்நாடு அரசு அறிவித்த தளர்வுகளால் வணிக வளாகங்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்க்கும் பொழுது மூன்றாவது அலைக்கு வழி வகுத்து விடுமோ என்கிற அச்சம் மேலோங்கி நிற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்றையதினம் சென்னை தியாகராய நகர் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வணிக வளாகங்களில் அமைந்துள்ள தெருக்கள் திருவிழா போல காட்சி அளித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல உணவகங்கள், சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது என அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடி கவனம் செலுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.






