--- --:--:-- --

காங்கிரஸ் உடையுமா? * தொடரும் குடைச்சலால் திமுக பலே திட்டம்..* கூட்டணி பிளவுபடாமல் இருக்க புது வியூகம்!

gjfjf

திமுக கூட்டணியில் அதிகாரப் பங்கு, அதிக சீட் வேண்டுமென்று தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி குடைச்சல் அளித்து வருகிறது. மறுத்தால் தவெகவுடன் கூட்டு சேர கதர் சட்டையினர் விரும்பும் நிலையில், காங்கிரஸ் கட்சியை உடைக்க, திமுக அதிரடி வியூகத்தை வகுத்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

 

அண்ணா அறிவாலயத்தில் ஆளும் கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சில மாதங்களாகத் தலைவலியும் வயிற்றெரிச்சலும் ஒரே நேரத்தில் வந்துவிட்டது. காரணம், கண்முன்னே நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளால் அல்ல, கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அட்டகாசத்தால்.

 

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கே மாதங்கள் இருக்கும் நிலையில், தி.மு.கவின் தேர்தல் வியூகத்தின் அஸ்திவாரத்திலேயே மண்ணை அள்ளப் பார்க்கிறது ராகுல் காந்தியின் காங்கிரஸ். ‘நம்ம பலமே கூட்டணிதான்…’ என்று நம்பிக்கொண்டிருக்கும் தி.மு.கவின் உச்சகட்டக் கோபத்திற்குப் பின்னே, ஒரு அதிரடி ‘ஆபரேஷன்’ திட்டம் இருப்பதை அறிவாலய வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

 

குடைச்சல் தரும் கதர் கோஷ்டி: தைரியம் தந்த தவெக!

தமிழக அரசியல் களம் இப்போது அனலாய் இருப்பது உண்மை. வலுவான கூட்டணியைக் கட்டி, இரண்டாம் முறை வெற்றியை ருசித்துவிடலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கணக்குப் போட்டால், அதைச் சிதைக்க உள்ளிருந்தே குரல்கள் கிளம்புகின்றன. ‘அதிகாரப் பங்கு வேண்டும், அதிக சீட் வேண்டும்!’ என்று காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து தி.மு.கவை மிரட்டுவதின் பின்னால், இப்போது புதிதாக அரசியல் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) துணிச்சல் ஒளிந்திருக்கிறது.

 

‘திமுக கைவிட்டால் என்ன… நமக்கு தவெக இருக்கிறது!’ என்ற அதீத நம்பிக்கையில்தான், காங்கிரஸின் பிடிவாதம் அதிகரித்துள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜ்குமார் முதல், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வரை தி.மு.கவுக்கு அன்றாடத் தலைவலியைத் தந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.கவோ, ‘பா.ஜ.கவுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இருக்கும் செல்வாக்கு கூட இவர்களுக்கு இல்லை; நாம் கொடுப்பதே அதிகம்!’ என்று கறாராக மறுக்கிறது. இந்த ஈகோ யுத்தத்தில், தி.மு.க – காங்கிரஸ் உறவில் புகை மண்டலம்தான் தெரிகிறது.

 

டெல்லி ஆடும் ‘டபுள் கேம்’: ராகுலின் மௌனம்

 

விவகாரம் உள்ளூர் தலைவர்களோடு நிற்கவில்லை. டெல்லி மேலிடம் ஆடும் ‘டபுள் கேம்’ தான் ஸ்டாலினின் கோபத்தின் உச்சம். ராகுல் காந்தி உள்ளிட்ட டெல்லி நிர்வாகிகள் விஜய்யின் தவெகவுடன் தொடர்பில் இருப்பது, தி.மு.கவுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உச்சகட்டமாக, காங்கிரஸ் தேசிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தி.மு.க அரசின் பொருளாதாரக் கொள்கையை, புள்ளி விவரங்களோடு கடுமையாக விமர்சித்தார். கூட்டணி தர்மத்தை மீறிய இந்தப் பேச்சுக்கு, வி.சி.க, ம.தி.மு.க., இடதுசாரிகள் என தி.மு.கவின் சகாக்கள் வரிசையாகக் கண்டனம் தெரிவிக்க… இங்கேதான் ஒரு திருப்பம்!

 

‘கூட்டணிக் கட்சியினர் உள்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது. லட்சுமண ரேகையைத் தாண்டி மூக்கை நுழைக்கக் கூடாது!’ என்று காட்டமாகப் பதிவிட்டு, காங்கிரஸின் எம்.பி. மாணிக்கம் தாகூர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டினார், ‘நாங்கள் சமாதானத்தில் இல்லை!’ என்று.

 

இத்தனைக்கும், பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக ராகுல் காந்தி தரப்பில் இருந்து எந்தக் கண்டனக் குரலும் எழவில்லை. இது, அவர் தவெகவுடன் கூட்டணி சேரும் டெல்லி மேலிடத்தின் முடிவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. தி.மு.கவை எரிச்சல் ஊட்டும் தலைவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தி.மு.கவுக்கு டெல்லி கொடுக்கும் ‘ரெட் சிக்னல்’ ஆகவே பார்க்கப்படுகிறது.

 

தி.மு.கவின் விசுவாச கோஷ்டி: ‘சிதம்பர’ ரகசியம்!

இப்படியான பூசல்களுக்கு மத்தியில், தி.மு.கவுக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு கோஷ்டியும் காங்கிரஸில் உண்டு. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே முதல்வர் ஸ்டாலினின் புகழ்பாடி பஜனை செய்கிறார்கள். இவர்கள், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்தை எதிர்த்தது மட்டுமின்றி, ‘தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக பக்கம் சாய்வது தற்கொலைக்குச் சமம்!’ என்றும் எச்சரித்துள்ளனர்.

 

இந்தப் பிரிவினர் புத்தாண்டை முன்னிட்டு, முதல்வரைச் சந்தித்து தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். ப.சிதம்பரத்தின் நிலைப்பாட்டுக்குப் பின்னால் ஒரு கச்சிதமான அரசியல் கணக்கு இருக்கிறது. ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நீடிக்க வேண்டுமென்றால், தி.மு.கவின் தயவு கட்டாயம் வேண்டும். இந்த ஒற்றைக் காரணத்துக்காக, ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட அவர் தயாராக இருக்கிறார் என்கிறார்கள்.

 

அறிவாலயத்தின் பலே ‘ஆபரேஷன்’ பிளான்!

 

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கூட்டணி பலம் குறையக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கும் ஸ்டாலின், டெல்லி மேலிடத்தின் ‘டபுள் கேம்’ கண்டு வெகுவாக அதிருப்தியடைந்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் வெற்றியே தமது வெற்றி என நம்பும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தனது வியூகத்தை மாற்றியாக வேண்டிய கட்டாயம்.

 

அதனால்தான், தி.மு.கவின் சீனியர் நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஸ்டாலின், ஒரு அதிரடி ‘ஷாக் ட்ரீட்மென்ட்’க்குத் தயாராகி விட்டதாக அறிவாலய வட்டாரங்கள் ரகசியம் பேசுகின்றன. காங்கிரஸ் தலைமையே கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்தால், அந்தக் கட்சிக்கு ‘ஆப்ரேஷன்’ செய்து, ‘உடைக்க’ முடிவெடுத்துள்ளது தி.மு.க. அந்த ‘பலே’ வியூகம் என்ன தெரியுமா? முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், மீண்டும் ‘காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை’யை ஆரம்பிப்பது!

 

முன்னர், ஜி.கே. மூப்பனார், காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ தொடங்கினார். அப்போது சிதம்பரம் உள்ளிட்டோர் மூப்பனாருடன் இருந்தனர். பின்னாளில் அ.தி.மு.கவுடன் தமாகா கூட்டணி சேர்ந்ததை எதிர்த்து, ப.சிதம்பரம் வெளியேறினார். பின்னர், ஜனநாயகப் பேரவை ஒரு கட்சியைத் தொடங்கி, தி.மு.க கூட்டணியில் இணைந்தார். பிறகு, தேசிய அளவில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உருவானதும் தனது கட்சியை இணைத்துக்கொண்டார்.

பழைய பார்முலாவை கையில் எடுக்கும் திமுக!

 

இப்போது அதே ‘பழைய ஃபார்முலாவை’ கையில் எடுத்து, தி.மு.கவுக்கு விசுவாசமான ப.சிதம்பரத்தை வைத்து, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தி.மு.க அனுதாபிகளை அந்தக் கட்சிக்கு இழுக்க அறிவாலயம் வலை விரித்துள்ளதாம்.

 

தேசிய அளவில் பா.ஜ.கவை எதிர்க்க காங்கிரஸ் கூட்டணி தேவை என்றாலும், உள்ளூரில் தவெகவின் தயவில் தி.மு.கவுக்குத் தொடர்ந்து தலைவலியைத் தரும் காங்கிரஸ் தலைமையின் பிடிவாதம் நீடித்தால், தமிழகத்தில் காங்கிரஸ் உடைவது உறுதி என்கிறார்கள் திமுக பெருந்தலைகள்.

 

இதனால், தமிழக அரசியல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு, தி.மு.கவின் விசுவாச கோஷ்டி தனியாகப் பிரிந்து வருமா? அல்லது ஒன்றுபட்ட காங்கிரஸாகத் தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் நீடிக்குமா? இந்தக் கேள்விகளுக்கான பதில், இன்னும் சில வாரங்களில், தை மாதத்தில் தெரிந்துவிடும்!

Leave a Reply

Right Menu Icon