இனி பால் பாக்கெட்டுகளுக்கு பதில் பால் பாட்டில்கள் வழங்கப்படுமா?
பால் பொருட்களுக்கு தான் பெருமளவு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன எனவும், அதனால் முன்புபோல பாட்டிலில் விற்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் உணவுப்பொருள் தின்பண்டம், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள், பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் மஞ்சள் பை திட்டம் கொண்டுவந்தாலும் 15 பொருட்கள் பிளாஸ்டிக்கில் வைத்து விற்கப்படுவதாக தெரிவித்தார். இதனையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக கூறி சில்லறை வியாபார கடைகளை மூடும் நிலையில் பிளாஸ்டிக்கில் பொருட்களை அரசு விற்பனை செய்யலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பால் ஏன் முன்பு போல பாட்டிலில் இருக்கக் கூடாது எனவும் பால் பொருட்களுக்கு பெருமளவு பிளாஸ்டிக் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.





