வருமான வரித்துறைக்கு சசிகலா அளித்துள்ள விளக்கம் என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகளை வாங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் தந்துள்ளார். இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு அனுப்பியுள்ள விளக்கத்தில் தன்னிடம் 48 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வைத்து 1, 674 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கியதாக சசிகலா மீது வருமான வரித்துறை புகார் கூறியிருந்தது. மேலும் 247 கோடி ரூபாயை ஒரு வருடத்தில் மதிப்புடைய பணமாக தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமிழக அரசின் ஒப்பந்ததாரருக்கு வட்டியில்லா கடனாக கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனை அடுத்து மொத்தமாக ஆயிரத்து தொள்ளாயிரத்து 11 கோடி ரூபாய் பணத்திற்கு விளக்கமளிக்க சசிகலாவிற்கு வருமான வரித்துறை கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவிற்கு விளக்கம் தந்துள்ள சசிகலா தன்னிடம் 48 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தான் வைத்திருந்ததாக கூறப்படும் 1,911 கோடி ரூபாய் மூன்றாவது நபர் ஒருவருக்கு சொந்தமானது என விளக்கத்தின் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா அவருக்குப் பிறகு அதிமுக தலைமை ஏற்று நடத்துவது பொறுக்காமல் அரசியல் கட்சிகள் செய்யும் கூட்டு சரியாகவே தன் மீதான நடவடிக்கைகள் இருப்பதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் சசிகலாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள வருமானவரித் துறை துணை இயக்குனர் பினாமி பரிமாற்றம் நடந்துள்ளது என சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.






