ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? கட்சி தொடங்கும் அறிவிப்பு வெளியாகுமா? மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையில் இன்று முக்கிய முடிவு!!
அரசியலில் குதிப்பதா? இல்லையா? என்பதில் பல வருடங்களாகவே தயக்கமும், போக்கும் காட்டி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தமது மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய முடிவை ரஜினி அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுவதால், இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக முடிசூடா மன்னனாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அரசியலில் குதிப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி அவ்வப்போது திடீர் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியே வந்தார். இதனால் ரஜினி அரசியலில் எப்போது ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்களும் இலவு காத்த கிளிபோல் மிக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஒரு வழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017 டிசம்பர் முதல் தேதி ரஜினி அரசியலில் குதிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அன்று ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்றும் 2021 தமிழக சட்டசபை தேர்தல் தான் தமது இலக்கு என்றும், 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்தார்.
இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரஜினியின் ரசிகர் மன்றமும் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு, கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் மாநில, மாவட்ட, ஒன்றிய வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் அரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுக்காமல் ரஜினி மவுனம் சாதித்தார். இதனால் ரஜினி, அரசியல் கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் இலவு காத்த கிளி போல் தவமாய் தவமிருந்து எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் மீண்டும் தனது மக்கள் 6 ன்ற நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிய ரஜினி, அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும், தமது அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் தாம் முதல்வராகப் போவதில்லை என்றும், தாம் கட்சிக்கு தலைமையேற்று, தகுதியான நபரை முதல்வர் பதவியில் அமர்த்தப் போவதாகவும் ரஜினி கூறியது பெரும் விவாதமானது.அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்போது இல்லைனா எப்போது ? என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி ரஜினி சூடேற்றினார்.
தொடர்ந்து பிரமாண்ட அளவில் மாநாடு நடத்தி தனது கட்சிப் பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார் என்றெல்லாம் பரபரப்பாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அடுத்த சில தினங்களிலேயே உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கி, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு திடீர் முட்டுக்கட்டை ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கால் ரஜினியும் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியதாகிவிட்டது.இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் 29-ந் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி தமிழக அரசியல் களத்தை பெரும் பரபரப்பாக்கியது.
அதில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
ஆனால் கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை. 2011-ல் எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன்.
அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியலில் ஈடுபடலாமா? என்று டாக்டர்களிடம் கேட்டபோது, கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ? அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. ஏஜினி பெயரிலான இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ரஜினி அரசியலில் குதிப்பதில் இருந்து ஜகா வாங்க, கொரோனாவையும், உடல் நிலையையும் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறார் என்று விமர்சனங்களும் எழுந்தன,
இந்த அறிக்கை குறித்து டுவிட்டரில் தமது கருத்தை வெளியிட்ட ரஜினி, அந்த அறிக்கை தாம் வெளியிட்டது அல்ல; ஆனால் அதில் உள்ள விஷயங்கள் உண்மை தான் என்று கூறி பரபரப்பை மேலும் கூட்டினார். அந்த அறிக்கையில் என் உடல் நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி குறியாக மாறியிருந்த நிலையில் திடீர் திருப்பமாக, சென்னையில் இன்று ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் . கூட்டத்தில், ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக முக்கிய விவாதம் நடத்தி வருகிறார். அரசியல் கட்சி ங்குவது குறித்தும், கட்சி தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், தேர்தல் பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், கட்சியை எவ்வாறு மக்களிடம் முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும் விவாதிப்பதாக தெரிகிறது.
இதனால் இந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






