மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் என்னென்ன?
மத்திய அரசு அறிவித்த தளர்வுகளில் ஒருசிலவற்றை தமிழக அரசு அமல்படுத்தாது என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்க தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, கலாச்சாரம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு அறிவிப்புகளில் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு, மாநிலத்திற்கு உள்ளேயும், பொதுமக்கள் பயணிப்பதற்கு, சரக்குகளை கொண்டு செல்லவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இதற்காக தனியாக இ பாஸ், அனுமதி கடிதம் ஆகியவற்றைப் பெற தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழக அரசோ பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் அரசு அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.







