எடப்பாடியில் முதல்வர் வெற்றி பெறுவாரா? வி.ஐ.பி. தொகுதிகளில் கள நிலவரம் சொல்வதென்ன?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், குஷ்பு உள்ளிட்ட் முக்கிய பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறிந்து கொள்ள, குற்றம் குற்றமே வார இதழ் நிருபர்கள் குழு நேரில் ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் இதோ:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், மீண்டும் முதல்வர் பழனிச்சாமி களமிறங்கியுள்ளார். எடப்பாடி தொகுதியில் இருந்து முதல்வர் பழனிசாமி 4 முறை எம்எல்ஏவாக தேர்வானார். 1996 மற்றும் 2006இல் இதே தொகுதியில் தோல்வியை சந்தித்தவர். எடப்பாடி தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக 6 முறை வென்றிருக்கிறது. பாமக 3 முறையும், திமுகவும், காங்கிரசும் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016 தேர்தலில் எடப்பாடியில் அப்போது எம்எல்ஏவாக இருந்த பழனிசாமியே மீண்டும் களம் இறக்கப்பட்டார். 98,703 வாக்குகள் பெற்ற அவர், பாமக வேட்பாளர் அண்ணாதுரையை விட 42,022 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலிலும் எடப்பாடி தொகுதியில், முதல்வர் பழனிச்சாமி களமிறங்கி இருக்கிறார். அவரை எதிர்த்து, திமுக மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார் போட்டியிடுகிறார். தொகுதியில் கொங்கு வேளாளர் சமூகம் கணிசமாக இருந்தாலும் வன்னியர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளனர். இதை மனதில் வைத்துத்தான், பாமகவை தங்கள் கூட்டணியில் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார் என்றும் கூறப்பட்டது. தொகுதிக்கு பலவற்றை செய்து தந்தது, பாமகவை தன்பக்கம் வைத்துக் கொண்டது உள்ளிட்டவை, முதல்வர் பழனிசாமிக்கு வெற்றிக்கனியை தரும்; முதல்வர் பழனிசாமி சொந்த தொகுதியில் மீண்டும் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரமாகும்.
போடி
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதன் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது இத்தொகுதி.

தேனி மாவட்டத்தில் அதிமுகவின் நம்பிக்கைக்குரிய தொகுதியாகவே போடி இருந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இத்தொகுதியில் 1989-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த 13 தேர்தலில் காங்கிரஸ் 4, திமுக 3, அதிமுக 6 முறையும் வெற்றிபெற்றுள்ளது. 2006-ம் ஆண்டில் திமுக வேட்பாளர் லெட்சுமணன், 2011& 2016இல் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 77.64% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. அப்போது, அதிமுக வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் எஸ். லெட்சுமணனை, 15608 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இம்முறை திமுக சார்பில் தங்க. தமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் முத்துசாமி, மக்கள் நீதிமய்யம் சார்பில் கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம்சந்தர் உள்ளிட்டவர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகிறனர்.
திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் வலுவான போட்டியாளர் என்பதாலும், அமமுகவின் முத்துசாமியும் கணிசமாக வாக்குகளை பிரிப்பார் என்பதாலும் ஓ.பி.எஸ். வெற்றி வாய்ப்பை அறுதியிட்டு கூற முடியாது. ஒரே கட்சியில் இருந்த 3 பேர் தற்போது எதிரெதிர் அணியில் இருந்து களத்தில் மோதுவதால் போடி சட்டமன்ற தொகுதி பரபரப்பாகவே உள்ளது.
திமுகவின் பிரசார வியூகம், அமமுகவால் பிரியும் ஓட்டுகள், வாக்காளர்களின் கடைசி நேர மனமாற்றம் உள்ளிட்டவற்றை பொருத்தே, துணை முதல்வர் ஓ.பி.எஸ். வெற்றிவாகை சூடுவாரா என்பது உள்ளது.
கொளத்தூர்
முதல்வர் பழனிச்சாமியின் எடப்பாடி தொகுதியை போலவே, தமிழகத்தின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகள்ல் ஒன்று, திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் சென்னை அருகேயுள்ள கொளத்தூர் தொகுதி. தொகுதி மறு சீரமைப்பின் கீழ், கடந்த 2011ல் கொளத்தூர் தொகுதி உருவானது. கடந்த 2011ம் ஆண்டு முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட கொளத்தூர் தொகுதியில், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி மோதினர். இதில் ஸ்டாலின் வெற்றி பெற்றார். 2016 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் தி.மு.க. சார்பில் ஸ்டாலினே நின்றார். அ.தி.மு.க. தரப்பில் களமிறங்கிய ஜே.சி.டி.பிரபாகர் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக மு.க. ஸ்டாலின் இங்கு போட்டியிடுகிறார். தற்போது, மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளதோடு, திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பது கூடுதல் அம்சமாகும். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்வதையும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதையும் ஸ்டாலின் வழக்கமாக வைத்திருந்தார்.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று குறைகளை சரிசெய்வதாக வாக்குறுதி தரும் மு.க. ஸ்டாலின், தனது சொந்தத் தொகுதியை சொர்க்கபுரியாக மாற்றுவார் என்ற நம்பிக்கை கொளத்தூர் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை தொகுதிக்குச் சென்று, மக்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு வளர்சிப்பணிகளை ஸ்டாலின் செய்துள்ளார். இதெல்லாம் அவருக்கான ஆதரவை உறுதி செய்துள்ளன.
கூட்டி கழித்துப் பார்த்தால், கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதே கடைசிகட்ட கள நிலவரமாகும்.
ராயபுரம்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் சென்னை ராயபுரம் தொகுதி, தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், தி.மு.க ஏழு முறையும், அ.தி.மு.க ஐந்து முறையும் இங்கு வெற்றிபெற்றுள்ளன. அதிமுகவில் ஐந்து முறையும் டி.ஜெயக்குமாரே வெற்றி பெற்று தனது கோட்டையாக வைத்துள்ளார். இவர் 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்துள்ளார். இத்தொகுதியில் திமுக 5 முறை வெற்றிபெற்றுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில், ராயபுரத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் ஐட்ரீம் திரையரங்க உரிமையாளர் மூர்த்தி, மக்கள் நீதி மய்யம் சார்பில் குணசேகரன், அமமுக சார்பில் சி.பி. ராமஜெயம், நாம் தமிழர் கட்சி சார்பில் கமலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அமைச்சரான பிறகும்கூட ராயபுரம் தொகுதி மக்களுடனான நெருக்கத்தை குறைத்துக்கொள்ளவே இல்லை. தொகுதி மக்களுக்குத் தேவையானவற்றை செய்துகொடுத்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார் என்பது, எங்கள் நிருபர் குழுவில் விசிட்டில் தெரிய வருகிறது. எனினும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தும், தங்களுக்கு அவர் பெரிதாக எதையும் செய்யவில்லையே என்ற அதிருப்தியும் மீனவர்கள் மத்தியில் உள்ளது.
இது திமுக வேட்பாளருக்கு சாதகமான அம்சங்கள். அவரும் உற்சாகமாக களமிறங்கு வாக்கு சேகரித்து வருகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளை எனக்கூறி வரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு மீனவருக்குக் கூட வேலை வாங்கித் தரவில்லை என்ற அவரது பிரசாரம் எடுபடுகிறது. இந்த முறை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிப்பெறுவேன் என அடித்து சொல்கிறார் ஐட்ரீம் மூர்த்தி.
சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்களைக்கொண்ட ராயபுரம் தொகுதியில், 30,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருக்கிறார்கள். அந்த வாக்குகள் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் என்ற நிலையில், தொகுதியின் கள நிலவரம் ஜெயக்குமாருக்கு சறுக்கலாகவே உள்ளது. ராயபுரத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தொகுதியாகும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவதால், ஒட்டுமொத்தமாக கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வென்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் செ. ராஜூ 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கடந்த 2016ஆம் தேர்தலில் 66.79% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுக வேட்பாளர் அ. சுப்ரமணியத்தை, வெறும் 428 வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றார். இம்முறை அமமுக சார்பில் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, திமுக கூட்டணியில் சி.பி.எம். கட்சி சீனிவாசன், மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இம்முறை போட்டி, அமமுக – அதிமுக இடையே தான் என்ற நிலை உள்ளது.
டிடிவி தினகரனின் கடின உழைப்பு, வைட்டமின் ‘ப’ போன்றவை, அதிமுகவுக்கு சரிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதனால், அமமுகவை எப்படியும் இங்கு கரை சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் டிடிவி உள்ளார். அதுதான் கைகூடும் போல் தெரிகிறது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, தமிழகத்திலேயே மிகச் சிறிய தொகுதியாகும். 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்த சில பகுதிகள் சேப்பாக்கத்துடன் இணைக்கப்பட்டு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியாக உருவெடுத்தது.

காலங்காலமாக சேப்பாக்கம் தொகுதி திமுகவின் வலுவான கோட்டைகளில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.கடந்த 1996, 2001, 2006 ஆகிய 3 தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளராக முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்றார். இம்முறை தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, முதல் முறையாக களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் பா.ம.க. வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். அ.ம.மு.க சார்பில் எல்.ராஜேந்திரனும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெயசிம்ம ராஜா என்பவரும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர்த்து ஐ.ஜே.கே சார்பில் கட்டுமானத்துறை வல்லுநரான முகமது இத்ரிஸ் என்பவரும் போட்டியிடுகிறார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் சிறுபான்மையினத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இத்தொகுதியின் வெற்றியை நிர்ணயிப்பதில் அவர்களின் பங்கு முக்கியமாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட தொகுதியில் அவரது பேரன் உதயநிதி களமிறங்குவது திமுகவுக்கு சாதகமான விஷயம். காலங்காலமாகவே திமுகவுக்கான தொகுதி என்பதாலும், திமுகவினருக்கு சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு போன்றவற்றால், எந்த தங்குதடையின்றி சுலபமாக உதயநிதி வெற்றி பெற்று முதல்முறை சட்டசபையில் அமருவார் என்பதில் சந்தேகமில்லை.
விருத்தாசலம்
ஒருகாலத்தில் தேமுதிக தலைவர் தனித்து நின்று வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில், இம்முறை அமமுக கூட்டணியில் சேர்ந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, களமிறங்கி இருக்கிறார். ஒருபுறம் பாமக, மறுபுறம் காங்கிரஸ் வேட்பாளர் என பிரேமலதாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் ஜே. கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அக்கட்சி சார்பில் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பிரேமலதா, ஐஜேகே சார்பில் ஆர். பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா உள்ளிட்ட பலர் போட்டியில் உள்ளனர்.
கடந்த 2005ல் தே.மு.தி.க கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் விருத்தாசலம் தொகுதி தமிழகத்தில் நட்சத்திர தொகுதியாக மாறியது. விருதாச்சலம் இம்முறை பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், வன்னியர் ஓட்டு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உற்சாகம் பொங்க பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேமுதிக சார்பில் பிரேமலதா களத்தில் உள்ளார். அவரால் அதிமுகவிற்கான வாக்குகள் நிச்சயம் பிரியும்; எனவே விருத்தாசலத்தில் காங்கிரஸின் ‘கை’ ஓங்கும் என்று நம்புகின்றனர். ஆனால், விஜயகாந்தின் நட்சத்திர அந்தஸ்து தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று பிரேமலதா நம்புகிறார்.
விஜயகாந்தின் தொகுதி என்ற சிறப்புடைய விருத்தாசலத்தில் இம்முறை பிரேமலதா வெற்றி பெற வாய்ப்பில்லை; எனினும், அவர் கணிசமாக ஓட்டுக்களை பிரிப்பார் என்பது நிச்சயம். பிரேமலதா எந்த கட்சிக்கான வாக்குகளை பிரிப்பார் என்பதை பொருத்தே, இத்தொகுதியில் வெற்றி யாருக்கு என்பதை சொல்ல முடியும். பாமகவின் கை ஓங்கி இருந்தாலும் கடைசி நேரத்தில் இங்கு எதுவும் நடக்கலாம் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.
ஆயிரம் விளக்கு
பாஜக வேட்பாளராக, முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகை குஷ்பு. அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், இத்தொகுதி வாக்காளர்கள் என்பது ஸ்பெஷலானது. இந்த தொகுதியில் திமுக 10 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1989-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடினார். அதன்பின்னர், 1996, 2001, 2006-ம் ஆண்டு தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் “ஹாட்ரிக்” வெற்றியை பதிவு செய்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் பா. வளர்மதி தோல்வியடைந்தார். தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்ட கு.க.செல்வம் 8,828 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக எழிலன் நிறுத்தப்பட்டுள்ளார். தனது வெற்றி அவ்வளவு எளிதல்ல என்பதையும், சினிமா செல்வாக்கு நிச்சயமாக வாக்குகளாக மாறாது என்பதை குஷ்பு நன்கு உணர்ந்துள்ளார். சென்னை தொகுதிகள் திமுகவின் கோட்டை என்பதை உணர்ந்துள்ளதால், தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
என்னதான் சினிமா நடிகை என்ற கவர்ச்சி இருந்தாலும், அது குஷ்புவுக்கு உதவாது என்பது தெரிகிறது. ஒருகாலத்தில் ஸ்டாலின் வென்ற தொகுதி என்பதால், பாரம்பரியமாகவே திமுகவின் கோட்டையாகவே ஆயிரம் விளக்கு தொகுதி இன்னமும் உள்ளது. எனவே, குஷ்பு கரைசேருவது கடினம் என்பதே நமது கணிப்பாக உள்ளது.
திருவொற்றியூர்
வடசென்னை தொகுதியான திருவொற்றியூர், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் போட்டியிடுவதன் மூலம் தமிழகத்தின் முக்கிய தொகுதியாக மாறி இருக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.

இத்தொகுதியில் நடைபெற்ற 12 தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தலில் கே.பி.பி.சாமி (தி.மு.க.) 82,205 வாக்குகள் பெற்று வென்றார். பி.பால்ராஜ் (அ.தி.மு.க.) 77,342, ஏ.வி.ஆறுமுகம் (தே.மு.தி.க.) 13,463, ஆர்.கோகுல் (நாம் தமிழர்) – 3,313 ஆகியோர் தோல்வியைத் தழுவினர். கே.பி.பி.சாமி கடந்தாண்டு மறைந்த நிலையில், தற்போது திருவொற்றியூர் தொகுதி காலியாக உள்ளது.
நடப்பு சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அமமுக சார்பில் என்.சௌந்ந்தரபாண்டியன், அதிமுக சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.குப்பன், திமுக சார்பில் மறைந்த எம்.எல்.ஏ கே.பி.பி.சாமியின் சகோதரர் சங்கர், ம.நீ.மய்யம் சார்பில் மோகன் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் 22 பேர் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக, சீமான் உள்ளிட்ட 3 பேருக்கு இடையில்தான் போட்டி கடுமையாக உள்ளது. இதில், தற்போதைய நிலவரம் திமுகவுக்கு சாதகமாகவே உள்ளது. சீமான் அதிக வாக்குகளைப் பிரித்து, திமுகவின் வெற்றிக்கு உதவுகிறார். திமுகவின் வெற்றி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் இருக்கும் என்று தெரிகிறது.
அரவக்குறிச்சி:
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் அரவக்குறிச்சியில் களம் இறங்கி இருக்கிறார், பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை.

கடந்த 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தி.மு.க. 5 முறை, அ.தி.மு.க. 5 முறை, காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும், சுதந்திர கட்சி ஒரு முறையும், முஸ்லிம் லீக் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை களமிறங்க, அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆர். இளங்கோ, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முகமது ஹனீப் ஷாகில், தமிழர் கட்சி சார்பில் அனிஷா பர்வீன், அமமுக சார்பில் பி.எஸ்.என். தங்கேல் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே, பாஜகவின் அண்ணாமலை சுறுசுறுப்பாக களமிறங்கி பிரசாரம் செய்து வருகிறார். இளைஞர் என்பதால் துடிப்புடன் இருப்பதோடு, தனது எளிய பேச்சாற்றலால் மக்களை ஈர்க்கிறார். வாக்கு அளித்தாலும் அளிக்காவிட்டாலும் பள்ளப்பட்டியில் 3500 முஸ்லீம்களுக்கு 6 மாதத்தில் வீடு கட்டித்தருவோம் என்று வாக்குறுதியை அண்ணாமலை வழங்கி இருப்பது, முஸ்லீம் வாக்காளர்களையே சற்று யோசிக்க வைத்துள்ளது.
அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோவும், சற்றும் சளைக்காமல் அண்ணாமலைக்கு சவால் கொடுத்து வருகிறார். எனினும் சிட்டிங் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கரூருக்கு தொகுதி மாறியது, திமுகவினருக்கு சற்று பின்னடைவை தந்துள்ளது. எனினும் 10 ஆண்டுகால அதிமுக அரசுக்கு மாற்று வேண்டுமென்ற மனநிலை வாக்காளர்கள் மத்தியில் இருப்பது, திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட் ஆகும். முஸ்லீம் வாக்காளர்களின் வாக்குகள் உள்ளிட்டவற்றை பொருத்து, வெற்றி வாய்ப்பு உள்ளது. எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் பெரியளவில் வாக்கு வித்தியாசம் இருக்காது என்று தெரிகிறது. அரவக்குறிச்சியில் மீண்டும் சூரியன் உதிக்குமா? அல்லது முதல்முறையாக தாமரை மலருமா என்பது மே 2ம் தேதி தெரியவரும்.
(விஐபி தொகுதியின் முழு அலசல்களை குற்றம் குற்றமே வார இதழில் படிக்கலாம்)





