--- --:--:-- --

தொண்டாமுத்தூரில் வேலுமணி வெற்றி பெறுவாரா? உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் களநிலவரம் இதோ!

SP velumani 02

வரும் சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஓரளவு கைகொடுப்பது கொங்கு மண்டலம் என்று கூறப்படும் நிலையில், கோவை மாவட்ட நிலவரம் என்ன, தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணி வெற்றியை ஈட்டுவாரா? குற்றம் குற்றமே வார இதழ் ஆய்வில் கள நிலவரம் இதோ

தொண்டாமுத்தூர்:

 

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத்தொகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுவதால், தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மொத்தம் 15 சட்டமன்ற தேர்தல்களை இந்தத் தொகுதி சந்தித்துள்ளது. தொண்டாமுத்தூரில் அதிகபட்சமாக அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வாகை சூடியுள்ளன. மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டில் அப்போது எம்எல்ஏவாக இருந்த எஸ்.பி.வேலுமணி மீண்டும் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டார். எஸ்.பி.வேலுமணிக்கு 1,09,519 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சையது முகமது 45,478 வாக்குகள் பெற்று தோற்றார். இந்த முறை மீண்டும் வேலுமணியே போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி, அமமுக சார்பில் எஸ். ஆர். சதீஷ் குமார், மநீம சார்பில் ஷாஜகான், நாம் தமிழர் கட்சி சார்பில் கலையரசி களமிறங்கியுள்ளனர். சுயேச்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

 

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு பல அடிப்படை தேவைகளை அமைச்சர் வேலுமணி நிறைவேற்றித் தந்துள்ளார். தொகுதி முழுக்க சாலைகள், தெருவிளக்குகள், பாலங்கள் என பலவற்றை நிறைவேற்றி இருக்கிறார். வேலுமணி தன் சொந்தச் செலவில், பல கோடி ரூபாய் மதிப்பில் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் அமைத்து தந்துள்ளார். இஸ்லாமிய ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு என பலவற்றை செய்துள்ளார்.

 

எனவே 2011, 2016 என தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற வேலுமணி, இந்த முறையும் தொண்டாமுத்தூரில் ஹாட்ரிக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

 

கோவை தெற்கு

 

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, தொழில் வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் மேம்பட்டுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக கோவை தெற்கு தொகுதி உள்ளது. காரணம், மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கி, முதல் முறையாக இங்கு தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவதுதான். கோவை தெற்கு தொகுதியில், பாஜகவின் அகில இந்திய துணைத் தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் தரப்பில் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இங்கு போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா 5 முறை வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் 4 முறை வெற்றி பெற்று உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.கவை சேர்ந்த அம்மன் அர்ச்சுணன் உள்ளார்.

 

கமல் போட்டியிட்டாலும், பிரதான போட்டி என்னவோ அதிமுக கூட்டணியில் பாஜகவின் வானதி சீனிவாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் இடையேதான் நிலவுகிறது. ஆனால், அரசியலில் கால்தடம் பதித்த கமலுக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை ஆழம் பார்க்க இந்த போட்டி உதவும்.

 

கமல் போட்டியிடுவதால் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிக்கான வாக்குகள் கணிசமாக பிரிகின்றன. என்றாலும் அதிக பாதிப்பு திமுகவுக்குத்தான் என்பது நமது கள ஆய்வில் தெரியவருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னமும் நாட்கள் உள்ளதால், கடைசி நேரத்தில் மக்களின் மனமாற்றத்தை கணிக்க முடியாது என்பதால், தொகுதியில் வானதி வெற்றி பெற்றுவிடுவார் என்று உறுதியாக கூறிவிடவும் முடியவில்லை. தீவிர வாக்கு சேகரிப்பு, களப்பணி உள்ளிட்டவற்றில் முந்திக் கொண்டு, கடைசி நேரத்தில் மக்கள் மனதை கவருவதை பொருத்து வெற்றி உள்ளதால் வெற்றி பாஜகவுக்கா, காங்கிரஸுக்கா என்பது இழுபறியாகவே உள்ளது.

 

தாராபுரம் (தனி)

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். கடந்த 1967-க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்துடன் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளது. தாராபுரம் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சி 3 முறைகளும் திமுக, அதிமுக தலா 5 முறைகளும் பாமக 1 முறையும் சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.காளிமுத்து சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் என். கயல்விழிம் அமமுக சார்பில் கலாராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா சுரேஷ் போட்டியிடுகின்றனர்.

 

பாஜகவினர் கடுமையாக உழைப்பதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதை வைத்து பார்த்தால், முருகனின் வெற்றி அக்கட்சிக்கு மிகப்பெரிய கவுரவப்பிரச்சனை என்பது புரிகிறது. பிரதமர் மோடி நேரடியாக வந்து வாக்கு சேகரித்தது, முருகனுக்கு பலமாக உள்ளது. கடந்த முறை வெற்றி பெற்றவர் 10 ஆயிரம் ஓட்டுகள் தான் வித்தியாசம் என்பதை வைத்து பார்த்தால், இம்முறை கடினமாக உழைத்தால் பாஜகவுக்கு வெற்றி கைகூட வாய்ப்புள்ளது. எனினும், தாராபுரம் தொகுதியில் கணிசமாக 30-40 ஆயிரம் வாக்குகள் இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளது. பாஜக மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி உள்ளதால் இந்த வாக்குகள் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

 

தமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தாராபுரத்தில் தாமரை மலருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முடிவு இழுபறியாக உள்ள நிலையில், இதற்கான விடை மே 2ம் தேதி தெரியும்.

 

உடுமலை

 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, காற்றாலை, பஞ்சாலைகள், தென்னை வளர்ப்பு, தென்னை நார் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கொங்கு வேளாளர்கள் 25 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 17.5 சதவீதம், கம்மவார், நாயுடு 10 சதவீதம், செட்டியார்கள் 4.5 சதவீதம், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய சிறுபான்மையினர் 11 சதவீதம் பேர் உள்ளனர்.

அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். ஆனால், தனது பதவி காலத்தில் ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று, பிஏபி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். நேதாஜி மைதானத்தில் உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில், தாராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், காங்கிரஸ் புறநகர் மாவட்ட செயலாளருமான தென்னரசு போட்டியிடுகிறார். இவர், உடுமலைக்கு புதிய வரவு. மக்களிடையே அறிமுகம் இல்லாதவர் என்பது மைனஸ். அமமுக சார்பில் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் பாபு ராஜேந்திரபிரசாத், மநீம சார்பில் நிதி மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். அதிமுக – திமுக-காங் கூட்டணி இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

 

திமுகவுடன் நேரடி போட்டியில்லை என்பது அதிமுகவுக்கு சாதகமான அம்சம். அத்துடன், தொகுதி முழுக்க அதிமுகவினர் தீவிர களப்பணியாற்றி வாக்கு சேகரித்து வருகின்றர். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு சாதகமான போக்கு தெரிந்தாலும், திமுக தரப்பில் கடும் போட்டி தரப்படுவதாலும், அமமுகவால் வாக்குகள் பிரிவதாலும் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி சூழலே நிலவுகிறது.

 

பொள்ளாச்சி

 

தென்னை நகரம் என்று அழைக்கப்படும் குளு குளு பொள்ளாச்சி, தேர்தலால் சூடுபறக்க உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுகவின் டாக்டர் வரதராஜன், மக்கள் நீதி மய்யத்தின் சதீஷ்குமார், அமமுக சார்பில் முன்னாள் எம்.பி.சுகுமார், நாம் தமிழர் கட்சியின் லோகேஷ்வரி மற்றும் சுயேச்சைகள் உட்பட 8 பேர் களத்தில் உள்ளனர். பிரதான போட்டி, திமுக- அதிமுக இடையேதான் உள்ளது.

கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில், 9 முறை அதிமுக வென்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் 2001, 2006 மற்றும் 2016 தேர்தல்களில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தொகுதிக்குட்ட கிராமப்புறங்களில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக விளங்கினாலும், கடந்த மக்களவை தேர்தலில் பெரும்தாக்கத்தை உருவாக்கிய பாலியல் சம்பவம் அக்கட்சிக்கு பெரும் சறுக்கலாக உள்ளது. அதுமட்டுமின்றி தொகுதியில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்வது மக்களை யோசிக்க வைத்துள்ளது.

 

இதனால், இம்முறை பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வெற்றிவாய்ப்பு என்பது இழுபறியாகவே உள்ளது. கடைசி நேரத்தில் மக்களின் மனதில் ஏற்படும் மாற்றத்தை பொருத்தே யாருக்கு வெற்றி என்பது முடிவாகும்.

Leave a Reply

Right Menu Icon