பணி முடிந்து வீடு திரும்பிய பெண் தலைமை காவலர் குத்திக் கொலை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடிந்து வீடு திரும்பிய பெண் தலைமை காவலர், அவருடைய கணவராலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்த தாமரைச்செல்வி, குடும்பப் பிரச்னை காரணமாகக் கடந்த 3 மாதங்களாக ஆட்டோ ஓட்டுநரான கணவர் அர்வினைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வாகனச் சோதனையை முடித்துவிட்டு, சுமார் 7 மணி அளவில் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதி வழியாக தாமரைச்செல்வி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கணவர் அர்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் தாமரைச்செல்வியின் கழுத்து மற்றும் கைப் பகுதியில் 11 இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தாமரைச்செல்வி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியைக் குத்திய பின்னர் தானும் கத்திரிக்கோலால் மார்பில் குத்திக்கொண்ட அர்வின், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடன் பணியாற்றிய சக பெண் காவலர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறை மத்தியிலும், பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





