சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்கள் கொரொனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு..!
கொரோனா எதிரொலியாக சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுதந்திர தினம் ,குடியரசு தினம், தொழிலாளர் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் ஊராட்சி சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் அந்தந்த கிராம மக்கள் தங்களது கிராம நலன், ஊராட்சி நிதி, வரி வருவாய், செலவு போன்றவற்றை விவாதிப்பர். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பால் இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. கொரொனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் காலை 8:45 க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.






