அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு தனது மரியாதையை செலுத்தினார்.
அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முக்கிய சொந்தங்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
தேமுதிக நிறுவனரும், மூத்த நடிகருமான விஜயகாந்தின் மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் நிலை குலைய செய்து விட்டது. இன்றைய தமிழ் சமூகத்தில், தவிர்க்க முடியாத, புறக்கணிக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பதை அவரது மரணம் நமக்கு உணர்த்தியுள்ளது.
விஜயகாந்தின் இழப்பு தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியிருக்கிறது.சென்னையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். வெளிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த மக்களால் சென்னை நிரம்பியது.





