நாளை தவெக கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
குறிப்பாக, செப்டம்பர் மாத இறுதியில், விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தவுள்ளது. ஏறக்குறைய உறுதியான நிலையில், அதற்கு முன்பாக கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய விஜய் முடிவெடுத்துள்ளார்.அதற்கு ஏற்ப, நாளை காலை 11 மணியளவில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
இதற்காக நாளை காலை 8 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்படும் நடிகர் விஜய், பனையூர் செல்லும் வரை உரிய பாதுகாப்பு வழங்க நீலாங்கரை மற்றும் கானத்தூர் காவல்நிலையங்களில் மனு அளிக்கப்பட்டுள்ளது.விஜய்க்கு சொந்தமான இடத்தில் கொடி அறிமுக நிகழ்ச்சி நடைபெறுவதால், காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்று காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கட்சியினர் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





