தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்..!
தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட் ராமன் நியமனம் செய்யப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளர் நீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த 29 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அடுத்த டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமனம் செய்து உள்துறை கூடுதல் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
1994 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியும், நாகப்பட்டினத்தை சேர்ந்தவருமான வெங்கட்ராமன், பல மாவட்டங்களில் எஸ்பியாகவும், சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போது நிர்வாக பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமன், டிசம்பர் மாதம் வரை சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





