25ம் தேதி கோவை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 25ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். கோவையில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வரும் 25ம் தேதி வருகை தர இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 26ம் தேதி கோவையில் இருந்து காணொளி காட்சி மூலமாக திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களையும் அவர் திறந்துவைக்கிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை வருவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை, வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில துணைத் தலைவர் கனக சபாபதி, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய கேசவ விநாயகம், “கோவைக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். வழிநெடுக தோரணங்களும், கட்சிக் கொடிகளும், அலங்கார வளைவுகளும் அமைத்து அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.





