ஐ.நா. அவையின் முடிவு எடுக்கும் குழுக்களிலிருந்து எவ்வளவு காலம்தான் இந்தியா தள்ளி வைக்கப்படும்.!
ஐக்கிய நாடுகள் அவையின் முடிவு எடுக்கும் குழுக்களிலிருந்து எவ்வளவு காலம்தான் இந்தியா தள்ளி வைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஐநா பொது அவை கூட்டத்தில் காணொளியில் பேசிய பிரதமர் மோடி கொரொனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் அவையின் பங்கு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய நாடுகள் அவையின் பொது அவை கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஐநாவில் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று என்பதில் பெருமைப்படுவதாகவும் 130 கோடி இந்தியர்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இருப்பதாகவும் கூறினார்.
ஐ.நா தொடங்கிய போது இருந்ததை விட இன்றைய உலகம் முற்றிலும் மாறி விட்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி கால மாற்றத்திற்கு ஏற்ப ஐநாவும் தனது செயல் முறைகளை மாற்ற வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.
உலகமே கடந்த 9 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராகப் போராடி வந்த நிலையில் ஐநாவின் பங்கு என்ன என பிரதமர் கேள்வி எழுப்பினார். இந்த இக்கட்டான நேரத்திலும் 150 நாடுகளுக்கு மிக அவசியமான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது என மோடி கூறினார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் முடிவெடுக்கும் குழுக்களில் இருந்து எவ்வளவு காலம்தான் இந்தியா தள்ளி வைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தியா பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.







