--- --:--:-- --

சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்..! உலக சுகாதார அமைப்புக்கான நிதி உதவி நிறுத்தம்..! டிரம்ப் அதிரடி நடவடிக்கை!!

11

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வரும் நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் அபாயம் குறித்து உலக நாடுகளிடம் உண்மையை மறைத்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒட்டு மொத்த உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தாக்குதல். சீனாவில் உருவாகி, இப்போது உலகின் பல நாடுகளும் இந்த வைரஸ் பாதிப்பால் அலறிக் கிடக்கின்றன. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி என பல நாடுகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு கொடுத்து கலங்கி நிற்கின்றன.

 

உலகின் மிகப் பெரும் வல்லரசு நாடு என பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலும் கொரோனா தாக்குதல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகிலேயே அதிகபட்ச அந்நாட்டில் 6 லட்சம் பேருக்கு மேலானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழப்பும் 26 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டினாலும் ஆச்சர்யமில்லை என்ற அளவுக்கு நிலைமை அமெரிக்காவில் மோசமாகி உள்ளது.

 

இந்த வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பரவியதற்கு சீனாவும், உலக சுகாதார அமைப்புமே காரணம் என்பது போல, அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதுடன், தனது கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். சீனாவின் ஊகான் நகரில் முதன்முதலில் உருவான இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை அந்நாட்டு அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

 

அது மட்டுமின்றி, இந்த வைரசின் தீவிரத் தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டிரம்ப் தொடர்ந்து பழி போட்டும் வந்தார். மேலும் உலக சுகாதார அமைப்பின் பாரபட்சமான நடவடிக்கைகளால், உலக நாடுகள் பலவும் கொரோனா தாக்குதலால் பெரும் விளைவுகளை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தப் போவதாக கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தார்.

 

இந்நிலையில், வெள்ளைமாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்து தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

 

ஐ.நா.அமைப்பின் ஒரு அங்கமாக செயல்படும் தன்னாட்சி அமைப்பான உலக சுகாதார அமைப்புக்கு உலகின் பல நாடுகளும் நிதி உதவி வழங்குகின்றன. இதில் அமெரிக்கா தான் அதிக நிதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில் அமெரிக்கா 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த அமைப்புக்கு வழங்கியிருந்தது.

 

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளில் உச்சத்தில் இருக்கும் போது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இது உகந்த நேரமல்ல என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோல் அத்னோம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon