சசிகலாவின் முடிவால் ஏமாற்றம்! தேர்தலில் அமமுக போட்டியிடுமா? டிடிவி தினகரன் பதில்
அரசியலில் இருந்து முமுமையாக ஓய்வு பெறுவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி அமமுக தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் பதில் அளித்துள்ளார்.
அரசியல் களத்தில் இருந்து விலகிக் கொள்வதாக, பரபரப்பான அறிவிப்பை நேற்றிரவு சசிகலா வெளியிட்டார். இது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெங்களூருவில் இருந்து திரும்பிய சசிகலா, அரசியலில் ஈடுபடவே திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தலுக்கான அவகாசம் குறைவு என்பதால், உடனடியாக தடாலடி அரசியல் செய்வது பலன் தராது என்று கருதி, அமைதி காக்க முடிவு செய்தார்.
சசிகலாவை பொருத்தவரை, வரும் தேர்தலில் அமமுக போட்டியிட்டால், அது அதிமுகவை பாதிக்கும்; எனவே இம்முறை ஒதுங்கி நின்று கொண்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அதற்கேற்ப திட்டம் வகுக்கலாம் என்பதாகும். ஆனால், டிடிவி தினகரனோ எப்படியும் தேர்தலில் களமிறங்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தன்னை விமர்சனம் செய்து வரும் அதிமுக அமைச்சர்களை தோற்கடித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார். இந்த விஷயத்தில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், சசிகலாவின் திடீர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அரசியலுக்கு முழுக்கு என்ற சசிகலாவின் அறிவிப்பால், அவரை நம்பி, அமமுக என்ற அரசியல் கட்சி தொடங்கிய டிடிவி தினகரனின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்தது.
சசிகலாவின் முடிவு குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். ஆனால் ஒற்றுமைப்படுவதற்கு வாய்ப்பில்லையோ என்ற எண்ணத்தில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அவரது முடிவு வருத்தமளிக்கிறது. எனக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
நான், மாலை வரை அவருடன் இருந்தேன். ஆனால், ஓய்வு பற்றி என்னிடம் ஏதும் சொல்லவில்லை. இரவில் தான் இந்த அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். அவரிடம் இந்த முடிவு வேண்டாமென்று அரைமணி நேரமாகச் சொல்லிப் பார்த்தேன். இதான்ப்பா சரியான முடிவு என்று என்னிடம் சொல்லிவிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியானது, நியாயம் கேட்ட 18 எம்.எல்.ஏ.க்களால் உருவானது. நான் எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். பாஜகவின் நிர்பந்தத்தின் பேரில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கினாரா என்று என்னிடம் கேட்பது என்ன நியாயம்?
அதே நேரம், சசிகலா சிறையில் இருந்தபோது நாங்கள் கட்சி ஆரம்பித்தோம், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தோம். உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தோம். எனவே, எங்களது மையப்பொருள் சசிகலா இல்லை. அமமுக தலைமையில் அமையும் கூட்டணியால் நாங்கள் திமுகவை தோற்கடிப்போம். நாங்கள் ஜனநாயக ரீதியாக அதிமுகவை மீட்கப் போராடுகிறோம் என்று தினகரன் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று டிடிவியிடம் சசிகலா கூறியதாக தகவல் வெளியான நிலையில், சசிகலா எனது கட்சியின் மையப்பொருள் அல்ல, தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று தினகரன் அறிவித்திருப்பது, முக்கியத்துவம் பெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




