ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! மனு தாக்கல் செய்த டிடிவி பேட்டி!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஒரு லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது தனது இலக்கு என்று, அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. மனு தாக்கலுக்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கோவில்பட்டி கோட்டாட்ச்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்ச்சியர் சங்கர நாராயணனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். உடன் தென் மண்டல அமைப்புச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா இருந்தார்.
மனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சமுதாயம் சார்பில் கோவில்பட்டியில் போட்டியிடவில்லை. எங்க கட்சியினர் இங்கு போட்டியிடும்படி, குறிப்பாக தென்மண்டல தளபதி கேட்டுக் கொண்டதால், இங்கு போட்டியிடுகிறேன்.
தமிழகம் ஏற்கெனவே 6 லட்சம் கோடி கடனில் மூழ்கிக்கிடக்கிறது. அ.தி.மு.க., தி.மு.கவின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள இலவசங்கள் அனைத்தும் வெற்று விளம்பரம்தான். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவசம் என்பது அரசுக்கு கூடுதல் சுமையைத்தான் ஏற்படுத்தும்.
கோவில்பட்டி தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும் என்பதும், அதே நேரத்தில் எதிர் போட்டியாளரை டெப்பாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்பதும் என் இலக்கு. வரும் தேர்தலில் அ.ம.மு.க அமோக வெற்றி அடையும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.





