கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களிடமிருந்து சிகிச்சை கட்டணங்களை வசூலிக்க கூடாது..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உரிய சிகிச்சை கட்டணங்களை மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மருத்துவ கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தாங்க முடியாத வேதனையில் தத்தளிப்பதாகவும் கூறி யிருக்கிறார். அரசுக்கு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கும் திரைமறைவில் ஏதோ ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தான் இந்த கட்டணங்கள் மறுக்கப்படுவதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
எனவே தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உரிய சிகிச்சை கட்டணங்களை மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க முதலமைச்சர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதை ஏற்க மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.







