போலீஸ் தடை எதிரொலி : மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து..! நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறுகிறது!!
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை.
இதனால், மு.க ஸ்டாலின் தனியாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதற்கு எதிராக சென்னை தேனாம்பேட்டை போலீசார் திடீரென திமுக தலைமை அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். 144 தடை உத்தரவு உள்ளதால், அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்துமாறுநோட்டீசில் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் திமுக தரப்பிலோ, சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. திமுக தரப்பின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த காவல்துறையினர், அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த தடை விதித்தனர்.144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், நோய் தொற்று ஏற்படும் சூழலால் அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று நடை பெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்து முதல்வர், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் – ஏன், மருத்துவ நிபுணர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன.அந்த அடிப்படையில் கொடிய கொரோனா நோய் குறித்து 15.4.2020 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறை மூலம், அதிமுக அரசு நோட்டீஸ் கொடுக்க வைத்தது. தனி மனித இடைவெளி விட்டு, அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் திமுக சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டும் சென்னை மாநகர காவல்துறை, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக அரசு பிடிவாதமாகச் செய்வது போல், ஜனநாயக நெறிகளுக்கு முரணான அரசியல் செய்ய, திமுக சிறிதும் விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும்; 16.4.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொளிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







