--- --:--:-- --

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்..! சென்னையில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி!!

18

கொரோனா தொற்று பாதிப்பால் நேற்றிரவு காலமான தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை மருத்துவமனையில் துரைக்கண்ணுவின் உருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அமைச்சர் சேர்க்கப்பட்டார். அவருடைய உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு 11-15 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

இதைத் தொடர்ந்து அவரது உடல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி மருத்துவமனையிலேயே பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 6.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார்,ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அங்கு மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மலர் தூவி கண்ணீர் செலுத்தினர்.

 

இதன் பின் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரிக்கு புறப்பட்டுச் சென்றது. ராஜகிரியில் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இன்று மாலை அவருடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

72 வயதான அமைச்சர் துரைகண்ணு, தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த ராஜகிரியில் 1948-ல் பிறந்தார்.தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பிஏ படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார்.

 

அதைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் பதவி வகித்தார். 2006, 2011 மற்றும் 2016 என மூன்று முறை தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2016-ல் வெற்றி பெற்ற போது ஜெயலலிதாவால் தமிழக வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

 

தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த துரைக்கண்ணுவுக்கு பானுமதி என்ற மனைவியும் இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என்று இரங்கல் தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய மறைவுக்கு ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

துரைக்கண்ணுவின் மறைவால் அவருடை சொந்த ஊரான ராஜகிரி மற்றும் பாபநாசம் தொகுதி பொதுமக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமைச்சர் ஒருவர் உயிரிழப்பு இதுவே முதல் முறை.ஏற்கனவே திமுக எம்எல்ஏவான ஜெ.அன்பழகன், குமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான வசந்த குமார் ஆகியோரை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த சோகம் மறையும் முன் அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிரிழப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon