அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு..!
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை முன்னேற்றமின்றி தொடர்ந்து பின்னடைவாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 வயதாகும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடந்த 13-ந் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதலில் விழுப்புரத்திலும் பின்னர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அவருடைய உடல் நிலை மோசமான நிலையில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் நேற்று மாலை அறிக்கை வெளியானது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை தரப்பில் இன்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இதற்கிடையே அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






