பெண்களை அவதூறாக பேசுபவர்களை மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறார்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு..!
பெண்களை அவதூறாகவும், இழிவாகவும் பேசுபவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆதரிக்கிறார் என்றும், அக்கட்சியின் சட்டப் பிரிவு இதற்கு உறுதுணையாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜயதசமி நாளான இன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற பின் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களை இழிவு படுத்துபவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அளிக்கிறார். கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது. இந்து கடவுள்களை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் இதுவரை கண்டிக்காதது ஏன்?. இந்து கடவுள்களையும், பெண்களையும் இழிவுபடுத்துபவர்களை ஆதரிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக அக்கட்சியின் சட்டப் பிரிவு உறுதுணையாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சுமத்தியுள்ளார்.






