பிளஸ்1, +2 வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடருமாம்… பள்ளிக்கல்வித் துறை அந்தர் பல்டி!!
பிளஸ்1 மற்றும் +2 மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவித்த ஆணையை பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த போது, பிடிவாதமாக கண்டு கொள்ளாமல் இருந்த தமிழக அரசு, தற்போது கொரோனாவை காரணம் காட்டி ரத்து செய்வதாகக் கூறி நடப்பு 2020-21-ம் கல்வியாண்டிலும் பழைய பாடத்திட்டமே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளிலேயே குழப்பங்களுக்கு பெயர் போன துறை என்றால் பள்ளிக்கல்வித் துறை தான் என்று கூறலாம். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதே பள்ளிக் கல்வி தான். ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே இத்துறையின் அறிவிப்புகள் அனைத்துமே குளறுபடி தான். பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் ஒரு உத்தரவை போடுவதும், அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் துறையின் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையனோ ஐயயோ எனக்கு தெரியாமல் நடந்து விட்டது எனக் கூறி பின் வாங்கி உத்தரவு அறிவிப்புகளை ரத்து செய்வதும் என பல்வேறு கூத்துகள் அரங்கேறி வருகின்றன.
“இந்த கொரோனா கொடுமையிலும் பள்ளிக்கல்வித் துறை ஏகப்பட்ட குளறுபடிகளையும் குழப்பங்களையும் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விஷயத்தில், தேர்வு நடத்தியே தீருவோம் என்று அடுத்தடுத்து தேர்வை தள்ளி வைத்து புதிய தேதிகளை அறிவித்தது”
ஆனால் கடைசி வரைக்கும் தேர்வு நடத்த முடியாத நிலையில், நீதிமன்றத்தில் குட்டுப் பட்ட பின் தேர்வு ரத்து என அறிவித்து ஆல் பாஸ் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தது. தற்போது பள்ளி திறப்பு குறித்தும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான், இந்த கல்வியாண்டு முதல் +2 பாடத்திட்டத்தில் மாற்றம் என அறிவிப்பாணை வெளியிட்டிருந்ததை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக, 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்த அரசாணையின்படி, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், மொழிப்பாடங்கள் உட்பட மொத்தம் 500 மதிப்பெண்களுக்கான 3 முதன்மை பாடத்தொகுப்புகளை 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும், 600 மதிப்பெண்களுக்கான 4 முதன்மை பாடங்கள் திட்டமும் அமலில் இருக்கும் என தெரிவித்த பள்ளி கல்வித்துறை, இத்திட்டத்தில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என கூறியிருந்தது.
அதாவது,பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களையும், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கணிதம் தவிர்த்து பிற பாடங்களை படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.து.
இந்த நடைமுறை 2020 – 21ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு, மாணவர்கள் நலனுக்கு எதிரானது. உயர் கல்வி வாய்ப்பை தட்டிப்பறிக்கும் என இந்த புதிய பாடத்திற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இடையேயும், கல்வியாளர்கள் இடையிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அரசுத் தரப்பில் பிடிவாதம் காட்டப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் பள்ளிக்கல்வித் துறைக்கு வந்துவிட்டது போலும். இதனால் புதிய பாடத்திட்டம் என்ற அரசாணை ரத்து என ஒரேயடியாக பல்டி அடித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிலும் பழைய பாடத்திட்டமே தொடரும். புதிய பாடத்திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. நான்கு பாடத்தொகுப்புகள் கொண்ட பாடத்திட்டமே 2020-21ஆம் கல்வியாண்டிலும் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.







