தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு..!
தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசை குறைப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு ஏழு மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.






