போதைக்காக Surgical Spirit-யை குடித்த மூன்று இளைஞர்கள்!
போதைக்காக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை ஸ்பிரிட்டை குடித்த மூன்று பேர் பெரம்பலூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாடு முழுவதும் ஊரடங்கு இருப்பதால் சில போதை வெறியர்கள் எந்தப் பொருட்களில் ஆல்கஹால் உள்ளது என்பதை தேடித்தேடி விபரீதம் தெரியாமல் குடித்து வருகின்றனர்.
அதனால் உயிரிழப்பும் தொடர் கதையாகி வருகின்றன . பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டை தண்ணீரில் கலந்து குடித்த இளைஞர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர்கள் 24 வயது சதீஷ், 34 வயதான ரமேஷ் மற்றும் 28 வயதான கார்த்திக் ராஜா நண்பர்களான இந்த மூன்று பேரும் போதை பிரியர்கள் என்பதால் ஊரடங்கு உத்தரவினால் மது கிடைக்காமல் தவித்து வந்தனர்.
அப்போது இவர்களது மற்றொரு நண்பன் பார்த்திபனை சந்தித்து எப்படியாவது மது குடித்தாக வேண்டும் என்று கூறியுள்ளனர். தான் மது கிடைக்காமல் தவிப்பதாக தெரிவித்த பார்த்தீபன் நண்பர்களிடம் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டை குடித்தால் போதை ஏறும் என்று ஐடியா கொடுத்துள்ளார். தான் ஏற்கனவே மெடிக்கல் கடையில் இருந்து ஸ்பிரிட் வாங்கிக் குடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ், ரமேஷ், கார்த்திக்ராஜா ஆகிய மூவரும் மருந்தகத்தில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டை வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து உள்ளனர். அதை குடித்த உடனே மூவருக்கும் பார்வை மங்கியுள்ளது மயக்கம் அடையும் நிலையில் அவர்கள் அலறியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மருந்துச் சீட்டு இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டை விற்பனை செய்த மருந்தக ஊழியர்களிடமும் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மதுவிற்கு அடிமையானவர்கள் ஊரடங்கை பயன்படுத்தி போதை பழக்கத்தில் இருந்து வெளியேற முயற்சிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அது தொடர்பான மனச்சிக்கல் இருப்பவர்கள் உடனே அரசின் 104 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.







