சார் பதிவாளர், நிலத்தை வாங்கியவர், புரோக்கர் இல்லங்களில் சிபிசிஐடி விசாரணை!
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள பழனி சார் பதிவாளரின் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்து மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான சிபிசிஐடி குழுவினர் பழனியில் கள ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பழனி அறநிலையத்துறையைச் சேர்ந்த முருகானந்தம், செயல் அலுவலர் கணபதி, ஆய்வாளர் சிவனேசன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா நேரில் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், திண்டுக்கல் ரவுண்ட் ரோடு லிங்கா அவன்யூ பகுதியில் உள்ள பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் இல்லத்தில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் நில மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நிலத்தை வாங்கிய சேதுபதியை கைதுசெய்யும் நடவடிக்கையை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக டிகேஎன் புதூரில் உள்ள சேதுபதியின் வீட்டிலும், பழனியில் லட்சுமணன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சேதுபதியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. அவர் எங்கு தலைமறைவாகி இருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திருநெல்வேலி டவுன் சாலைத் தெருவில் வசித்து வரும் கல்யாண மேடை அலங்கரிப்பு தொழில் செய்து வரும் சண்முகசுந்தரம் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது.






