--- --:--:-- --

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

3

திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுகவைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி தவெக அரசுக்கு கண்டனம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்று உயிரின் மேன்மையை பறைசாற்றச் சொல்வார்கள்.

 

 

 

தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டிவிடுவோம் என்று கூறி, கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது என்று பெருமூச்சு விட்ட மக்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதன் தொடர்ச்சியாக `நாங்கள் இருக்கிறோம்’ என்று தற்போதைய த.வெ.க. ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் ‘கோவில் காவலாளி அஜித்குமார்’ முதல் சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாரால் ‘விக்னேஷ்’, தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடித்தும், என்கவுண்டர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

 

 

முக்கியமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருசில பெருந்தலைகளைக் காப்பாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் அன்றைய அரசால் எடுக்கப்பட்டன என்று பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொல்லி ஆட்சி அமைத்த இந்த
தவெக அரசில், அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என்பதுபோல், கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் விடுபட்டிருந்தாலும், ‘துஷ்ட சக்தி’ ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள். ‘யானையின் பிடியிலிருந்து தப்பி, முதலையின் வாய்க்குள் விழுந்தது போல்’ அப்பாவி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்’ எங்களின் போக்கை யாரும் மாற்ற முடியாது என்ற இருமாப்போடு ஒருசில காவல் துறையினர் செயல்படுவதும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுவதும், தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்தி சாகடித்தார்கள் என்று அவரது குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த அரசின் அமைச்சர்களான சிலர் போய் அந்தக் குடும்பத்தினரை விலைபேசி, சமாதானப்படுத்த முயன்று தோற்றிருக்கிறார்கள். அமைச்சர்கள் தருவதாகச் சொன்ன நிவாரண நிதியையும், உதவியையும் பெற மறுத்ததாகச் செய்திகள் வருகின்றன.

 

 

இதேபோல், சென்னை புழல் சிறையிலும் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவரது உறவினர்களும் நீதிகேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கும் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள். விலை மதிப்பற்ற உயிர்களுக்கு – உயிரே உன் விலை என்ன? என்று கேட்டு, பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதலமைச்சருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தன்னைப் பார்க்க வந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டாலே, அந்தக் குடும்பங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் மிதக்கிறார்கள். லாக்அப் மரணங்களும், சிறைச்சாலை மரணங்களும், தேவையற்ற என்கவுண்டர்களும், குற்றச் செயலில் &டவ;டுபட்ட அதிகாரம் மிக்கவர்களைக் காக்க முயற்சிக்காமல், இதுபோன்ற செயல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இவைகளையெல்லாம் விரைவில் தடுத்துவிடுவோம் என்று அமைச்சர்களை விட்டு சொல்ல வைப்பது, ‘குதிரைகள் ஓடிய பின்னால், லாயத்தை பூட்டுவதற்கு’ சமமான ஒன்றாகும்.

 

 

‘கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோர், படம் ஓடினாலும் – ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தைத் தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை’ என்பதை, தவெக முதலமைச்சர் உணர வேண்டும். மாற்றத்தை வேண்டி தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சைக் கேட்டு வாக்களித்த மக்களுக்கு,
மாற்றத்தைத் தராவிட்டாலும், ஏமாற்றத்தைத் தராத வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்று பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon