--- --:--:-- --

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் : மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

4

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை மலை உச்சியில் அதற்கான ஏற்பாடுகளை செய்த கோயில் நிர்வாகம் திடீரென ரத்து செய்தது.

 

இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா, தென்னிந்தியா பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையிட்டார்.

 

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையரை காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டார். தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார். மாலை 6 மணியளவில் வழக்கமான முறைப்படி, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

 

மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், மனுதாரர் மற்றும் 10 பேர் உடன் சென்று தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உடன் சி.ஐ.எஸ்.எப். படையினர் பாதுகாப்புக்காகச் செல்ல வேண்டும் என்றும் தனி நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

 

அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் 16 கால் மண்டபம் அருகே கோஷமிட்டனர். தடுப்புகளை மீறி அவர்கள் மலையேற முயன்றதால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

 

அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டார். தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்து அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லக்கூடிய பாதையிலேயே சூடம் ஏற்றி தரையில் விழுந்து வழிபட்டு விட்டு கலைந்து சென்றனர்.

 

இதற்கிடையே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இல்லத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையீடு செய்தார். மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியல் இடப்படும் என தெரிவித்தார்.

 

இதேபோன்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை நிறுத்தி வைக்க கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் சார்பில் மதுரை கிளையில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளன.

Right Menu Icon