--- --:--:-- --

திருப்பரங்குன்றம் விவகாரம்..போராட்டம் நடத்திய 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

1

வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பு அமைப்பினர்கள் திருப்பரங்குன்றம் மக்களுடைய பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சி மேற்கொள்வதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பழங்காநத்தத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றத்தில் மதவாதம், இனவாதத்தால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்தார்.

 

அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீதிமன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியவுடன் தன்னெழுச்சியாக பக்தர்கள் போராடியதாக விளக்கமளித்தார். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரும் வாழ்ந்து வருவதாக மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பாக, திருமங்கலம் கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 30-ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்ததாகவும், இந்தக் கூட்டத்தில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என அனைத்துக் கட்சியினரும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட சூழலில், அ.தி.மு.க பிரதிநிதி மட்டும் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்து சென்றுவிட்டதாக” ஆட்சியர் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

 

வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பைச் சேர்ந்த அமைப்பினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறியுள்ள ஆட்சியர், பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேண, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் சிக்கந்தர் பாஷா தர்காவில் வழிபாடு நடத்த இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நேற்று முன் தினம் போராட்டம் நடத்திய 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Right Menu Icon