திருப்பூரில் நடந்த கோர விபத்து..கல்லூரி மாணவர் இருவர் சம்பவ இடத்திலே பலி..!
திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு சக்தி டிரான்ஸ்போர்ட் மூலம் இயங்கி வரும் தனியார் பேருந்து 120 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த தனியார் பஸ்சில் கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 80க்கும் மேற்பட்டோர் மற்றும் சாதாரண பயணிகள் 40 பேர் என 120 பேர் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

பஸ்ஸானது திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, கூனம்பட்டி, செங்காளிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சேரும் பகுதியில் உள்ள பல்ல கவுண்டம்பாளையம், சாம்ராஜ்பாளையம் அருகில் அதிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இதனை கேட்ட அருகில் இருந்த பொதுமக்களும், அந்த சமயத்தில் வாகனத்தில் வந்தவர்களும் விபத்து நடந்த பகுதிக்கு வந்து பஸ்சின் கண்ணாடியை உடைத்து பலரை பலத்த காயத்துடன் மீட்டனர். இந்த விபத்தில் விருமாண்டம்பாளையம், தில்லை குட்டைபாளையம் பகுதியை சந்திரன் மகனும், நந்தா கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வரும் சந்திரன் மகன் பெரியசாமி (வயது 19 ), அதே போல் சுண்டக்காம் பாளையம், ஊமச்சி வலசு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகனும், நந்தா கல்லூரியில் பி.எஸ்.சி., (சி.எஸ் ) படித்து வரும் ஹரி கிருஷ்ணன் (19) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சுண்டக்காம்பாளையம், ஊமச்சிவலசில் வசித்து வரும் மாரிமுத்து மகனும், கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் குரு ராஜ் (19), கோவை, கே.ஜி. மருத்துவ மனைக்கும், திருப்பூர், பாண்டியன் நகரை சேர்ந்த முருகானந்தம் மகள் கீதாவுக்கு கை முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்த அவரை ஈரோடு சுதா மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், செங்கப்பள்ளி, முத்தம்பாளையம் நாச்சிமுத்து மகனும்,பெருந்துறை ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் தரணிஷ் (15 ), கை முறிவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக ஈரோடு நந்தா மருத்துவமனையிலும், மாணவர் சுபித்துக்கு (19) கை முறிவு ஏற்பட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும்,விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் பெருந்துறை ஐ. ஆர். டி. டி மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்துடன் 15 பேருக்கும் மேற்பட்டோர் பல்லக்கவுண்டம்பாளையம் பி.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.

மேற்படி சம்பவ இடத்திற்கு திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். விபத்தின் போது பஸ்ஸின் டீசல் டேங்கில் இருந்து டீசல் ஒழுகியதால், தீயணைப்பு வண்டியும் கொண்டுவரப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீ விபத்து ஏற்படாவண்ணம் சரி செய்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அடி சத்தத்துடன் பஸ்ஸில் பாட்டுகளை போட்டு வந்ததுடன், மிக வேகமாக பஸ்ஸை ஓட்டி வந்ததும் அதனால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததும் தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் விபத்தில் காயம் அடைந்த மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்களது தோழிகளையும், நண்பர்களையும் அவருக்கு என்னாச்சு என்று தேடி அலைந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் இது குறித்த தகவலை அவ்வப்போது அவர்கள் வீட்டாருக்கும் செல் போன் மூலம் தகவல் தெரிவித்து வந்தனர்





