திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!
திருவள்ளூர் மாவட்டடம் பெரியபாளையம் அருகே தனியார் கடல் உணவு ஏற்றுமதி ஆலையில் திடீரென அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கன்னிகை பேரி என்ற கிராமத்தில் செயின்ட் பீட்டர்ஸ் அன்ட் பால் என்ற கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஒடிசா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 250 தொழிலாளர்கள் வழக்கம்போல பணியாற்றி வந்தனர். காலை 10.30 மணியளவில் குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படும் அமோனியா தொட்டியில் இருந்து வாயு கசிய தொடங்கிய நிலையில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். சிலருக்கு மூக்கு, வாய் பகுதிகளில் ரத்தம் கசிந்தது.
இதனால் பதற்றமான சூழல் உருவானதை அடுத்து, மயங்கி விழுந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூச்சு திணறல், சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒடிசா மாநில பெண் தொழிலாளிகள் ஜுமானி ஜுவாங், மாலோதி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேல் சிகிச்சைக்காக பலர் ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், ராஜ்மோகன், மரிய வில்சன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பர்வேஸ் உறுதி அளித்துள்ளார்.
மேலும் ஆலை வளாகத்தில் வழக்கமான அளவைவிட அதிக அளவில் தூசு இருந்ததாக மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வழக்கமாக பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 என்ற அளவில் காற்றின் நுண்துகள் கண்டறியப்படும் நிலையில் அமோனியாவின் அளவு 200 முதல் 300 பிஎம் வரை இருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உடலில் உள்ள ஈரப்பதத்துடன் அமோனியா இணைந்து, அமோனியம் ஹைட்ராக்சைடாக மாறியதாகவும், இந்த கடுமையான காரத்தன்மையால் மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பில் கடுமையான ரசாயன காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.





