திருமுருகன்பூண்டி நகராட்சி எங்கும் கோலாகலம்: லதா சேகர் மனுதாக்கலால் விழாக்கோலம்!
திருமுருகன்பூண்டி நகராட்சியில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் லதா சேகர் தலைமையில், அதிமுக வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கொரோனா விதிகளை பின்பற்றி, அதே நேரம், உற்சாகம் பொங்க அதிமுகவினர் மனு தாக்கல் செய்தனர்; இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இங்குள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு, வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல், ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாக இன்று, அதாவது பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆரம்பம் முதலே அதிமுகவினர் இதை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். குறிப்பாக, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பூண்டி பகுதி அதிமுகவினர் உற்சாகமடைந்தனர். காரணம், பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக உருவெடுத்து, முதல்முறையாக தேர்தலை சந்திப்பது தான்.
பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் இருந்த நிலையில், தற்போது 27 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டு, உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. தங்களின் எஃகு கோட்டை பூண்டி என்ற மகிழ்வோடு, இத்தேர்தலில் அதிமுகவினர் களப்பணியாற்றி வருகின்றனர்.

சுறுசுறுப்பாக செய்லாற்றும் லதா சேகர்
நகராட்சி தலைவர் பதவிக்கு, அதிமுக தரப்பில், முன்னாள் பேரூராட்சி தலைவராக இருந்த லதா சேகர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆன்மிகம், அரசியல், மக்கள் தொண்டு என்று பன்முகத் தன்மை கொண்டவர்; வார்டின் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுபவர். எளிமையாக பழகும் குணம், கனிவான பேச்சு, சுறுசுறுப்பாக செய்லாற்றும் லதா சேகர், 11வது வார்டில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சுபமங்கரமான வெள்ளிக்கிழமையான இன்று, நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லதா சேகர், தனது ஆதரவாளர்கள் புடைசூழ, உற்சாகத்துடன் இன்று காலை வேட்புமனுவை, தேர்தல் அலுவலர் ஆனந்தனிடம் தாக்கல் செய்தார். அவருடன், நகராட்சியின் மற்ற 27 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் ஒருவர் பின் ஒருவராக வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கலின் போது, முன்னாள் பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமி, அவினாசி தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம், முன்னாள் நகரச் செயலாளர் விஸ்வநாதன், அதிமுக நிர்வாகிகள் கார்த்திகேயன், நடராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரவாரமுடன், உற்சாகத்துடன் அதிமுகவினர் வந்தாலும், கொரோனா விதிகளை கடைபிடித்து, மனுதாக்கல் நிகழ்வில் பங்கேற்றனர்.
களைகட்டியது பூண்டி நகராட்சி
மனுதாக்கலுக்கு கடைசி நாள் என்பதால், பூண்டி நகராட்சி அலுவலகம் களைகட்டி இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதேபோல், சுகாதாரத்துறை சார்பில், சானிடைசர், உடல் வெப்பம் கண்டறியும் சோதனை உள்ளிட்ட முன்னேற்பாடுகளும் கச்சிதமாக செய்யப்பட்டிருந்தன.
திருமுருகன் பூண்டி நகராட்சியை, லதா சேகர் தலைமையில் அதிமுக கைப்பற்றும்; அனைத்து வார்டிலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, அதிமுக நிர்வாகிகள் நமது “குற்றம் குற்றமே” இதழுக்கு நம்பிக்கை தெரிவித்தனர். அதே உற்சாகத்துடன் அதிமுகவினர் பிரசாரத்தை தொடங்கி, மக்களை சந்தித்து வருகின்றனர்.





