3 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சம்பளபிடித்தம் இருக்காது..!
3 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14வது ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3 நாட்களாக தொ.மு.சா உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் பின்னர் சென்னையில் ஆலோசனை நடத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்து உள்ளதாக தெரிவித்தனர். வேலை நிறுத்தம் நடைபெற்று நாட்களுக்கு சம்பள பிடித்தம் இருக்காது என்றும் அரசாங்கம் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.






