சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ.(எம்) கண்டனம்
சேலம் மாநகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவர் ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை வைத்தே மிரட்டிப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதோடு, அப்பெண்களைப் பாலியல் வணிகத்திலும் தள்ளியுள்ள கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அதன் மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தவெக கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதோடு, எவ்வித அரசியல் அழுத்தமுமின்றி விசாரணை நேர்மையாக நடைபெறுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனைப் போலீசார் தற்போது கைது செய்துள்ள போதிலும், இதன் பின்னணியில் மேலும் பலர் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இதனை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சிபிஐ(எம்) கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் தப்பவிடாமல் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதோடு அவர்களின் விபரங்கள் கசியாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





