துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது – நீதிமன்றத்தில் காவல்துறை ப
அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் தொடர்பாக துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் அசோக்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி அமைச்சர் சேகர்பாபு தனது அடியாட்களுடன் தன்னைத் தாக்கினார்கள் என்றும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தோல்வி பயத்தில் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று தன்னை தாக்க திட்டமிட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் ஆனால் ஒரே காவலர் மட்டும் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சேகர்பாபுவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதால் வீட்டிற்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் சினோரா அசோக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.





