சிஏஏவுக்கு எதிராக நீடித்து வரும் போராட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நீடித்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் படங்களை தோரணமாக வைத்த போராட்டக்காரர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி திருப்பூர் அறிவழி சாலையில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் 9வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து சிஏஏ, என் ஆர் சி, என்பிஆர்க்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 600 அடி நீளமான தேசியக் கொடியை ஏந்தியபடி அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் அஞ்சாதே போராடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசிய வானதி ஸ்ரீனிவாசன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் போராட்டத்தை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டினார்.





